10, 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது - மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்

நெல்லை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.;

Update: 2020-07-15 22:15 GMT
நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன. பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், பள்ளிக்கூடங்களை திறக்காமல் வீடியோ பதிவு மூலம் பாடங்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அனைத்து பாடப்பிரிவுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. நெல்லை கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 93 பள்ளிகளும், வள்ளியூர் கல்வி மாவட்டதில் 108 பள்ளிகளும் இருக்கின்றன. இந்த பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமாக வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர் ஒரு சில பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் வாங்கி சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் வீதம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். அதன் பிறகு அரசின் வழிகாட்டுதலின் படி பாடங்கள் மாணவர்களுக்கு நடத்தப்படும். மடிக்கணினி மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்