சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் ரூ.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணி

சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் ரூ.33 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2020-07-15 04:10 GMT
விழுப்புரம்,

விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகள், சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையொட்டி விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் அமைந்துள்ள சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் கனிமவளத்துறை மூலம் தடுப்பணை கட்ட ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.

இங்கு தடுப்பணை அமைந்தால் விழுப்புரம் மாவட்டத்தில் சின்னகள்ளிப்பட்டு, சேர்ந்தனூர், அரசமங்கலம், தென்குச்சிப்பாளையம், வடவாம்பலம், குச்சிப்பாளையம், நரசிங்கபுரம், பூவரசங்குப்பம் ஆகிய கிராமங்களும், கடலூர் மாவட்டத்தில் கண்டரக்கோட்டை, அக்கடவல்லி, பெரியகள்ளிப்பட்டு, பூண்டி, புலவனூர், மேல்குமாரமங்கலம், ஏரிப்பாளையம், குரத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த 46,380 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும் இதன் மூலம் 728 ஆழ்துளை கிணறுகள் பயன்பெறும். அதுமட்டுமின்றி தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு அதன் நீர்மட்டம் வெகுவாக உயரும். விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும். குடிநீரின் தரம் உயரும்.

இந்த தடுப்பணை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்குகிறார். தமிழக சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் அருண்மொழித்தேவன், பாண்டியன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சத்யாபன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் செய்திகள்