எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று முதல் பாடப்புத்தகங்கள் வினியோகம்

கோவையில் இன்று (புதன்கிழமை) முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்- 2 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2020-07-15 02:02 GMT
கோவை,

கொரோனா பாதிப்பு காரணமாக கோவையில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியவில்லை. மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பாடப்புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டன.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி பாடப் புத்தகங்கள் வாங்க வரும் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

ஆசிரியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவ-மாணவிகள் என பிரித்து புத்தகங்களை வழங்க வேண்டும். பள்ளிகள் முன்பு கூட்டம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளஸ்- 2 மாணவ-மாணவிகளுக்கு அரசு ஏற்கனவே வழங்கிய மடிக்கணினியில் (லேப்-டாப்) வீடியோ பாடங்களும் பதிவேற்றம் செய்தும் கொடுக்கப்பட உள்ளன. எனவே பிளஸ்-2 மாணவர்கள் மடிக்கணினியை பள்ளிகளுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்