திசையன்விளையில், கொரோனா தடுப்பு அவசர ஆலோசனை கூட்டம் - இன்பதுரை எம்.எல்.ஏ பங்கேற்பு

திசையன்விளையில், கொரோனா தடுப்பு அவசர ஆலோசனை கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ பங்கேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-07-14 22:15 GMT
திசையன்விளை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை நேற்று காலை இன்பதுரை எம்.எல்.ஏ. சந்தித்தார். அப்போது ராதாபுரம் தொகுதி திசையன்விளையில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க முழு அடைப்பை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து மதியம் திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தாசில்தார் பாஸ்கரன் தலைமையில் இன்பதுரை எம்.எல்.ஏ. அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகளான தங்கையா கணேசன், டிம்பர் செல்வராஜ், வெங்கடேஷ், குமார், மார்த்தாண்டம், வேல்முருகன், ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் அந்தோணி அமல்ராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திசையன்விளையில் நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை முழு கடையடைப்பு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல வசதியாக இன்று (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் கடைகளை திறக்கலாம் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கடைகள் திறந்திருக்கும்போது கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என இன்பதுரையிடம் வியாபாரிகள் கோரினர். மேலும் முழு அடைப்புக்கு பிறகு கடை திறக்கும்போது வடக்கு பஜாரில் சாலையில் உள்ள காய்கறி கடைகளை காலியாக உள்ள பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லலாம் என வியாபாரிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

திசையன்விளை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தியபோது, உடனடியாக சென்னையில் உள்ள பேரூராட்சி இயக்குனரை இன்பதுரை எம்.எல்.ஏ செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் உடனடியாக திசையன்விளைக்கென சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என வியாபாரிகளிடம் இன்பதுரை எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்