ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கி தராததால், ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-07-14 23:11 GMT
சின்னாளப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவி காஞ்சனா. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், 3-வது மகன் பிரதீப் (வயது 17.) இவர், காந்திகிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்து தற்போது பிளஸ்-2 செல்கிறார்.

இந்தநிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதீப் தனது தாயாரிடம் ‘ஆன்ட்ராய்டு‘ செல்போன் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு காஞ்சனா, தற்போது பணம் இல்லை என்றும் சில நாட்கள் கழித்து செல்போன் வாங்கி தருவதாகவும் கூறி சமாதானம் செய்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பிரதீப், கோபித்து கொண்டு கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்த பிரதீப்பை, அவருடைய நண்பர்கள் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் காஞ்சனா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் காந்திகிராமம்-அம்பாத்துரை இடையே ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிரதீப் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆன்லைன் வகுப்புக்கு தனது தயார் செல்போன் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த பிரதீப் திண்டுக்கல்-மதுரை மார்க்கத்தில் சென்ற சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்