மதுரையில் கொரோனா சிகிச்சைக்கான நவீன மருந்துகள் அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? என்பது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-07-14 07:26 GMT
மதுரை,

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு டாசிலிசம்பாப், ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ‘பெவிபிரவிர்’ என்ற மாத்திரையும் கொரோனா சிகிச்சைக்கு கை கொடுப்பதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லேசான மற்றும் மிதமான பாதிப்பு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ரெம்டெசிவிர், டாசிலிசம்பாப் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளின் விலையை ஒப்பிடும் போது இந்த பெவிபிரவிர் மாத்திரையின் விலை மிக குறைவு. இந்த மாத்திரைகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் வந்தன. இரண்டாம் கட்டமாக சில தினங்களுக்கு முன்பு 6500 மாத்திரைகள் வந்தன.

இதுகுறித்து பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:-

சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனைத்து விதமான உயிர்காக்கும் மருந்துகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து மருந்து, மாத்திரைகளும் அரசிடம் கேட்டு உடனடியாக பெறப்படுகிறது. இதனை கண்காணிப்பதற்கு தனி டாக்டர்கள் குழு இருக்கிறது.

பெவிபிரவிர் மாத்திரைகள் மூலம் மதுரையில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு வைரஸ் தடுப்பு மாத்திரை. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஏனெனில் அவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் குறையும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்படும். இதனை தவிர்க்கும் வகையில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிய “பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்” என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 450 எண்ணிக்கை கொண்ட பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இப்போதைக்கு இது போதுமான அளவில் இருப்பதாகவும், வரும் காலங்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி தேவைப்பட்டால், அதனை தமிழ்நாடு மருத்துவபணிகள் சேவை கழகத்திடம் கேட்டு பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனைகளுக்கும் போதிய மருந்துகள் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தை பொறுத்தமட்டில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 66 பேர் நேற்று உயிரிழந்தவர்கள்.

கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் சிலர் தெரிவிக்கையில், “அரசு மருத்துவமனைகளை ஒப்பிடும் போது தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இல்லை. எனவே அரசு மருத்துவமனைகளுக்கு கிடைப்பது போல் தனியார் மருத்துவமனைகளுக்கும் நியாயமான விலையில் அனைத்து மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்