திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - செல்வராஜ் எம்.பி., வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியன்பள்ளி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பணிகளை ஆய்வு செய்த செல்வராஜ் எம்.பி., அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையேயான மீட்டர்கேஜ் ரெயில் சேவை கடந்த 2004-ல் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வர்த்தக சங்கம், உப்பு உற்பத்தியாளர்கள், பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றுமதியாளர்கள் இந்த வழித்தடத்தின் அவசியத்தை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எடுத்துக்கூறினர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வழித்தடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து அகல பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
அகஸ்தியன்பள்ளி, வேதாரண்யம், தோப்புத்துறை, குரவப்புலம். கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் முன்பு இருந்த ரெயில் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக ரெயில் நிலைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
அதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளி வரை ரெயில் பாதையில் மண் சாலை அமைக்கும் பணி தொடங்கி பாதை அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. ஆங்காங்கே பாலப்பணிகள் மற்றும் ரெயில்வே கேட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை நாகை எம்.பி செல்வராஜ், ரெயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பயணிகள் போக்குவரத்தை விட சரக்கு போக்குவரத்து இந்த வழித்தடத்தில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் அனைத்து பணிகளும் தரமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள், ஊராட்சிமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.