கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடனுதவி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுதொழில் கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ளவும் விரும்புபவர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். சுய உதவிக்குழுக்களுக்கான கடன் பெற குழுவில் 60 சதவீத சிறுபான்மை இனத்தவரும், 40 சதவீத பிற இனத்தவரும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 55 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவருக்கு ரூ.98 ஆயிரமும், நகர்புறங்களில் வசிப்பவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்திலோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிலோ விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பத்துடன் இருப்பிடம், சாதி, வருமான சான்று, திட்டத்தொழில் அறிக்கை ஆகியவற்றுடன் வங்கி சம்பந்தப்பட்ட இதர ஆவணங்களை இணைத்து அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.