பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த பட்டதாரி வாலிபர் பலி

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-07-14 00:00 GMT
பழனி,

பழனியை அடுத்த ஆயக்குடியில் இருந்து அமரபூண்டி- ரூக்குவார்பட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற் காக ஒரு இடத்தில் பாலம் கட்டுவதற்காக சாலையின் குறுக்கே கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தின் அருகே எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர்.இதற்கிடையே பாலத்துக் காக தோண்டப்பட்ட பள்ளம், பட்டதாரி வாலிபரின் உயிரை குடித்தது. இது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பழனி பழைய ஆயக்குடி 2-வது வார்டை சேர்ந்தவர் முருகன். விவசாயி. அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 22). பட்டதாரியான இவர், தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ரூக்குவார்பட்டிக்கு சென்றார்.

பின்னர் அவர், ஆயக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பதை அறியாத அவர், மோட்டார்சைக்கிளுடன் உள்ளே பாய்ந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, நேரில் சென்று சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தார். அப்போது, பள்ளம் தோண்டியது குறித்து எச்சரிக்கை பலகை வைக்காத ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றார். இதற்கிடையே விபத்தில் பலியான பட்டதாரி வாலிபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்