நெல்லிக்குப்பம் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிட்டிருந்த வாழைகள் வெட்டி அகற்றம்
நெல்லிக்குப்பம் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிட்டிருந்த வாழைகள் வெட்டி அகற்றப்பட்டது
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிட்டிருந்த வாழைகள் வெட்டி அகற்றப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாசன வாய்க்கால்
நெல்லிக்குப்பம் அருகே பாலூரில் பாசன வாய்க்கால் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் இந்த வாய்க்காலில் தூர்வாரும் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சுமார் 150 பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பாலூரில் பாசன வாய்க்காலை தனிநபர்கள் ஆக்கிரமித்து 300-க்கும் மேற்பட்ட வாழைகளை சாகுபடி செய்திருந்தனர். இதை பார்த்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் அந்த வாழைகளை வெட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த தனிநபர்கள் சிலர், தொழிலாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தாரணி பார்த்திபன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விரைந்து வந்து, அந்த தனிநபர்களிடம், ஏன் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து வாழைகள் சாகுபடி செய்துள்ளர்கள் என கேட்டனர். அப்போது அவர்கள், இது எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் மற்றும் பாலூர் கிராம உதவியாளர் ஆகியோர் விசாரித்ததில், அந்த பாசன வாய்க்கால் முழுவதும் அரசுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
பரபரப்பு
இதையடுத்து பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் அனைத்தையும் வெட்டி அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி அகற்றினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தாரணி பார்த்திபன், அரசு பணி செய்யவிடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.