தாசில்தாரின் கணவர் - பெண் போலீசுக்கு கொரோனா: தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம் மூடப்பட்டது
ஊழியர், பெண் போலீசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.;
சேரன்மாதேவி,
ஊழியர், பெண் போலீசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
யூனியன் அலுவலகம் மூடல்
நெல்லை மாவட்டம் பரப்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ஒருவர், நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்குநேரி யூனியன் அலுவலகம் மூடப்படுவதாக யூனியன் ஆணையாளர் பிரமநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யூனியன் அலுவலகம் மூடப்பட்டு வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புளியங்குடி போலீஸ் நிலையம்
புளியங்குடி நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் அருகே உள்ள துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டது
சேரன்மாதேவி தாசில்தாரின் கணவர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வீரவநல்லூர் மற்றும் பத்தமடையை சேர்ந்த பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.