மாவட்டத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: 100 சதவீத கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.;

Update: 2020-07-13 08:38 GMT
கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை முன்னிட்டு கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்த மாதம் (ஜூலை) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெங்களூரு சாலை, சென்னை சாலை, கே.தியேட்டர் சாலை, ராயக்கோட்டை சாலை உள்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரத்தில் மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் திறந்திருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் டி.வி. பார்த்தும், குழந்தைகளுடன் விளையாடியும் பொழுதை கழித்து வீடுகளில் முடங்கினர். முன்னதாக நேற்று முன்தினமே பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, மத்திகிரி, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகிரி, காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை, கல்லாவி, பர்கூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் உள்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் சாலைகளில் தேவையின்றி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்