சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்புசெட் அமைக்க மானியம்; வேளாண்மை பொறியியல் துறை அறிவிப்பு

சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்புசெட் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மை பொறியியல் துறை அறிவித்தள்ளது

Update: 2020-07-13 03:42 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளர் கான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் 220 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு 5, 7.5, 10 குதிரைதிறன் கொண்ட சோலார் பம்புசெட்டுகள் அமைத்து தரப்படும். மொத்த செலவு தொகையில் 70 சதவீதம் அரசு மானியமாகவும், மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகள் தங்களது பங்குத்தொகையாக செலுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் தங்களது முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும் போது சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான கடிதத்தினை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்காத விவசாயிகள் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சூரிய சக்தியால் இங்கு மோட்டார் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும்போது நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்