பிராட்வே பஸ் நிலையத்தில் மீண்டும் காய்கறி சந்தை: இன்று தொடங்குகிறதா?

பிராட்வே பஸ் நிலையத்தில் மீண்டும் காய்கறி சந்தை இன்று தொடங்குகிறதா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2020-07-13 02:19 GMT
சென்னை, 

சென்னை கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே பிராட்வே பஸ் நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு பொதுமக்கள் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், கூட்டம் கூட்டமாக திரிந்ததாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் கொத்தவால்சாவடியில் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்ததின் காரணமாக தங்களுக்கு மீண்டும் பிராட்வே பஸ் நிலையத்தில் சந்தை அமைத்து தர வேண்டும் என காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம், காய்கறி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் வியாபாரிகள் கோரிக்கை ஏற்கப்பட்டு, மீண்டும் பிராட்வே பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைகிறது. இதையொட்டி கடந்த ஓரிரு நாட்களாக பஸ் நிலைய வளாகத்தில் தேவையான பணிகள் நடந்து வந்தன. குறிப்பிட்ட இடைவெளியில் வியாபாரிகள் இருக்கும் வகையில் தரையில் பெயிண்ட் கொண்டு கோடுகள் வரையப்பட்டன.

பொதுமக்கள் வரிசையில் நிற்க ஏதுவாக வட்டங்களும், வியாபாரியிடம் இருந்து இடைவெளி கடைபிடித்து காய்கறி வாங்கும் வகையில் கோடுகளும் வரையப்பட்டன. இந்த காய்கறி சந்தை இன்று செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் சில பணிகள் முடிவடையாத நிலையில் முழுமையாக சந்தை இன்று செயல்பாட்டுக்கு வருவது கடினம் என்றே வியாபாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்