நாய்களுக்கு பயந்து ஓடிய காட்டெருமை இரும்பு கதவில் சிக்கி பலியான பரிதாபம்

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி நகர் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.;

Update: 2020-07-13 00:53 GMT
கொடைக்கானல்,

தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில் நகரை ஒட்டியுள்ள தோட்டங்களுக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் அவை கூட்டமாக குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டெருமைகள், சில நேரங்களில் தோட்டத்தின் கம்பி வேலிகளில் சிக்கி பலியாகும் சம்பவங்களும் நிகழ்கிறது.

இந்தநிலையில் நேற்று நாயுடுபுரம் பகுதியில் காட்டெருமை ஒன்று தனியாக உலா வந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்தன. இதனால் அந்த காட்டெருமை மிரண்டு ஓட்டம் பிடித்து, அருகில் இருந்த வீட்டின் இரும்பு கதவினை தாண்ட முயன்றது.

அப்போது, இரும்பு கதவின் மேல் இருந்த ஊசியான கம்பியில் சிக்கி அது உயிருக்கு போராடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் காட்டெருமை இறந்துவிட்டது.

பின்னர் வனத்துறையினர், இரும்பு கதவில் சிக்கி இறந்த காட்டெருமையின் உடலை கைப்பற்றி வனப்பகுதியில் புதைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கம்பி வேலி மற்றும் வீடுகள் முன்பு இரும்பு கதவு அமைக்கும் போது அதில் ஊசியான கம்பிகளை வைக்கக்கூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்