விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு மூதாட்டி சாவு கள்ளக்குறிச்சியில் 68 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Update: 2020-07-13 00:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 1,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்த நிலையில், 954 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். மற்றவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு கொரோனா மருத்துவமனை, வழுதரெட்டி சுகாதார வளாகத்தில் உள்ள சிறப்பு கொரோனா மருத்துமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மூதாட்டி சாவு

இதனிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 80 வயதுமூதாட்டி நேற்று அதிகாலை உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட் அருகே கோப்புபாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, 29-ந்தேதி கால் தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு, தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 4 பேருக்கு தொற்று

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,459ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 1723 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 250 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1723-ல் இருந்து 1791 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 999 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்