ராஜ்பவன் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா கவர்னர் தனிமைப்படுத்தி கொண்டார்

16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Update: 2020-07-12 23:30 GMT
மும்பை, 

மராட்டிய கவர்னர் மாளிகையில் 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

ஊழியர்களுக்கு கொரோனா

மராட்டிய கவர்னர் மாளிகையான மும்பை ராஜ்பவனில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு அங்கு பணிபுரிந்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கவர்னர் மாளிகை ஊழியர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேலும் 14 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தி கொண்டார்

இதையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது. நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு எனது கடமைகளை தவறாமல் நாள்தோறும் செய்து வருகிறேன். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறேன். எனது உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை” என்றார்.

இதற்கிடையே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ராஜ்பவனில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்