காய்கறி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
காய்கறி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பேட்டை,
காய்கறி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விளைநிலங்களில் மூலதனம்
நெல்லை மாவட்டம் பேட்டையை அடுத்துள்ள வெள்ளாளன்குளம், வெட்டுவான்குளம், திருப்பணி கரிசல்குளம், ஆலங்குளம் போன்ற பகுதியில் உள்ள குளங்கள் கடந்த ஆண்டில் தூர்வாரப்படாததால் நீர்மட்டம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு சில குளங்கள் விவசாயிகளாலும், பொதுப்பணித்துறையினராலும் தூர்வாரப்பட்டும், ஷட்டர்கள் பழுது நீக்கம் செய்தும் குடிமராமத்துப்பணிகள் நடந்துள்ளதால் பல குளங்களில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளது. கிணறுகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளன.
இதில் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கத்தரி, வெண்டை, பீர்க்கு, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளையும், வாழை போன்ற பழ வகைகளையும், பூக்களையும் பயிர் செய்துள்ளனர். இதற்காக அவர்கள் உழவு கூலி, விதை நாற்று, மருந்து அடித்தல், உரம், விவசாய கூலிகளுக்கான சம்பளம் என ஏராளமாக செலவு செய்தும், கடன் பெற்றும் தங்கள் விளை நிலங்களில் மூலதனம் செய்தனர்.
கொள்முதல் நிலையம்
ஆனால் இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்பவர்கள் வெண்டை கிலோ 3 ரூபாய், கத்தரி கிலோ 5 ரூபாய் என காய்கறிகளை மிகவும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். ஆனால் மார்கெட்டில் கிலோ 10 முதல் 18 வரை விற்பனை ஆகிறது. மூலதனம் போட்டு உழைத்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ காய் உற்பத்தி செய்ய குறைந்தது 3 ரூபாய் செலவாகும்போது அதே விலைக்கு கொள்முதல் செய்வதால் பல விவசாயிகள் மேலும் கஷ்டப்பட விரும்பாமல் தங்களது விளை நிலத்தில் விளைந்த காய்கறிகளை கூலி ஆட்களை வைத்து பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுவிட்டனர்.
அவை எல்லாம் தற்போது மறு உழவு செய்யும் அவலநிலையில் உள்ளன. எனவே அரசு இதை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், வங்கி கடன் போன்றவைகளில் சலுகைகள் காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் இப்பகுதியில் காய்கறி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.