முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-12 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட ஜூலை மாதம் உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் பிரதான சாலையான நெல்லை- திருச்செந்தூர் சாலை எந்த வித வாகனங்களும் இயக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஏரலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மார்க்கெட், மெயின் பஜாரில் உள்ள பெரிய கடைகள், சிறிய கடைகள், டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தனர். ஏரலில் உள்ள பல்வேறு பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலை 11 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காயல்பட்டினம் வந்தார். அவரை புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் அபுல்ஹசன் கலாமி, பொது செயலாளர் நவாஸ் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அவர்களிடம் காயல்பட்டினம் பகுதியில் இன்னும் அதிகமாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையில் போலீசாருடன், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் ஊரடங்கு நடவடிக்கை பற்றி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோருடன் கேட்டு தெரிந்து கொண்டார். உடன்குடி மெயின் பஜார், நான்கு ரதவீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார் தலைமையில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களை பிடித்து விசாரணை நடத்தி, பஜாருக்கு வருவதற்கு தடை விதித்தனர். இதனால் பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கோவில்பட்டியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் செய்திகள்