திருச்சி மாவட்டத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா உறுதி ஆனது. இதில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேரும் அடங்குவர்.

Update: 2020-07-12 02:56 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாசிஸ் விடுதியில், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் 150 பேரில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில் செயல்படும் அம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்றுக்கு ஆளான 4 பேரும் சமீபத்தில் மதுரை சென்று திரும்பி இருக்கிறார்கள். அவர்களை சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்தபோது தான் தொற்று உறுதியானது. இதையடுத்து அம்மா உணவகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.

தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,410 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா சிகிச்சை பெற்ற 53 பேர் நேற்று ஒரேநாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தற்போது 589 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்