ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்கள், இரும்பு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின் சாதனங்கள், இரும்பு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-07-12 00:41 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசு மின்சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2003-ன் படி மின்சாதனங்கள் இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்களை மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்வதோ, விற்பனை செய்வதோ கூடாது. அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தரம் குறைந்த பொருட்கள் பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே திருவாருர் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ. தர சான்றில்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவை பெட்டி, மின்சார அடுப்பு, மின் சாதனை பொருட்கள் மற்றும் பி.வி.சி. கேபிள்கள் ஆகியவற்றை தயாரிப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2012-ன் படி உயர் அழுத்த மற்றும் உயர், மித மற்றும் குறைவான வெப்ப கலன்களில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் மட்டுமின்றி துருபிடிக்காத எஃகு பொருட்களும் தரக்கட்டுபாட்டு ஆணை 2016-ன் படி கட்டாயமாக இந்திய தரச்சான்று நிறுவனத்தின் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஜனவரி 2017 முதல் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மோட்டார்ஸ் தரக்கட்டுபாட்டு சட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு தர கட்டுபாட்டு ஆணை 2017-ன் படி கட்டாயமாக இந்திய தர சான்று நிறுவனத்தின் சான்றினை பெற்றிருக்க வேண்டும். இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்கள் மற்றும் மோட்டார் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்து மாதிரிகளை சோதனை செய்து உரிய வழிகாட்டுதல் வழங்்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டு ஆணைகளின்படி தர நிர்ணய சான்றினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்