ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 42 பேருக்கு கொரோனா ஒரேநாளில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 75 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 75 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
42 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்ட கொரோனா பாதிப்பு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேர் கண்டறியப்பட்டனர். இதில் 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
ஏற்கனவே 327 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 369 ஆக உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 221 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
75 பேர் குணம் அடைந்தனர்
நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 31 பேரும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 2 பேரும், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவரும், கொடுமுடி பகுதியை சேர்ந்த 7 பேரும், கோபி பகுதியை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 20 பேருக்கும், தொடர்பில்லாமல் 14 பேருக்கும், வாகனங்களில் பயணம் செய்யும்போது 7 பேருக்கும், முன்கள பணியாளர்கள் மூலம் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 75 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் தற்போது 188 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தமாக இதுவரை 175 பேர் குணம் அடைந்து உள்ளனர். 6 பேர் மரணம் அடைந்தனர்.