கவர்னர் கிரண்பெடிக்கு தனி சட்டம் இல்லை சுகாதாரத்துறை அமைச்சர் ஆவேசம்
கவர்னர் கிரண்பெடிக்கு தனி சட்டம் கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடிக்கு தனி சட்டம் கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை அதிகரிப்பு
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் தொகுதி வாரியாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சிடம் கூறி வந்தேன். நாளை (இன்று ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் அதற்கு அடுத்த வாரம் முதல் ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது என்று சுகாதாரத்துறை மூலம் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
தவறான தகவல்
புதுவையில் கவர்னர் கிரண்பெடி கொரோனா தொடர்பாக தகவல்களை தவறாக கூறி வருகிறார். கொரோனா தொடர்பான தகவல்களை தெரிவிப்பது அவரது பணியல்ல. இவ்வளவு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கவர்னர் சொல்ல தேவையில்லை. தன்னுடைய பணிகளை விட்டு விட்டு மற்றவர்களின் பணிகளில் தலையிடுவதே அவருக்கு வழக்கம்.
கவர்னர் கிரண்பெடிக்கு மக்கள் பணியில் அனுபவம் கிடையாது. அவருக்கு 4 ஆண்டுகள் தான் அனுபவம் உள்ளது. ஆனால் எனக்கு 31 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை நான் யோசித்து செய்கிறேன். நீங்கள் (கவர்னர்) 4 ஆண்டுகளாக புதுச்சேரியை கெடுத்துவிட்டீர்கள். உங்களால் நிலைமையே மாறிவிட்டது. நான் 24 மணி நேரம் வேலை செய்கிறேன்.
தனிசட்டம் இல்லை
புதுச்சேரியை எப்படி முன்னேற்றலாம் என்று யோசியுங்கள். இந்தியாவில் எந்த கவர்னர் இப்படி கூறுகிறார் என்று பாருங்கள். உங்களுக்கு என்று தனி சட்டம் இல்லை. அனைத்து கவர்னர்களுக்கும் ஒரே சட்டம்தான். கவர்னர் மாளிகையில் ஒருவருக்கு தொற்று என்று கூறினேன். அது இல்லை என்று கவர்னர் மறுத்து கூறுகிறார். பொய்யான தகவலை மக்களுக்கு தெரிவிக்கிறார். பொறுப்புள்ள ஒரு பதவியை பிரதமர் கொடுத்துள்ளார். அதன் வழியில் செயல்படுங்கள். உங்களை பற்றி அனைத்தும் மக்களுக்கு தெரிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.