ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பில் டாக்டர் திடீர் சாவு விஷ ஊசி போட்டு தற்கொலையா? போலீசார் விசாரணை
புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்த டாக்டர் திடீரென உயிரிழந்தார்.
புதுச்சேரி,
புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்த டாக்டர் திடீரென உயிரிழந்தார். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜிப்மர் டாக்டர்
நேபாள நாட்டை சேர்ந்தவர் டாக்டர் சஞ்சீவ் (வயது26). இவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு (எம்.எஸ்.) படித்துக் கொண்டே டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக ஜிப்மர் மருத்துவமனை வளாகம் டாக்டர்கள் குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார்.
அவருடன் பணியாற்றி வந்த டாக்டர் ஹசானா பணிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சஞ்சீவின் அறையை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவை திறக்க முயன்றபோது உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கும் பதில் இல்லை.
காரணம் என்ன?
இதனால் சந்தேகமடைந்த சக டாக்டர்கள் குடியிருப்பு பணியாளர் கண்ணப்பன் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் சஞ்சீவ் இடது கையில் மருந்து ஏற்றிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அறையின் வலி நிவாரண மருந்துகள் அதிக அளவில் இருந்தன.
இதுகுறித்து ஜிப்மர் டீன் பங்கஜ் குந்ரா கோரிமேடு போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சஞ்சீவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் சஞ்சீவ் வலி நிவாரண மாத்திரை மருந்துகளை அதிக அளவு எடுத்துக்கொண்டதனால் உயிரிழந்தாரா? அல்லது விஷ ஊசிப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.