இன்று முழு ஊரடங்கு: நெல்லையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

நெல்லை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-07-11 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமானதையொட்டி இம்மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி கடந்த 5-ந்தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதேபோல் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மக்கள் கூட்டம்

இதையொட்டி பொதுமக்கள் நேற்று கடைவீதிகளில் குவிந்தனர். காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நேற்றே கூடுதலாக வாங்கினார்கள். டவுன் ரதவீதிகள், சந்திப்பு, பாளையங்கோட்டை கடை வீதிகள் மற்றும் தற்காலிக மார்க்கெட்டுகளில் மக்கள் போட்டி போட்டு பொருட்களை வாங்கினார்கள். மேலும் இறைச்சி கடைகளிலும் இன்றைய தேவைக்கு நேற்றே இறைச்சிகளை வாங்கினார்கள். ஆடு, கோழி, மாடு இறைச்சிகள் மற்றும் மீன்களையும் வாங்கினார்கள். அவற்றை குளிர்சாதன பெட்டிகளில் பதப்படுத்தி வைத்தனர்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் மற்ற கடைகள், காய்கறி கடைகளில் மக்கள் அதிகளவு குவிந்ததால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை திருப்பி விட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

எச்சரிக்கை

இன்று முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களும் தங்களது வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்தியாவசிய, அவசர தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும்.

இதை மீறி வெளியே சுற்றி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் வந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்