கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 70 பேர் பலி பாதித்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 70 பேர் பலியாகி உள்ளனர். நேற்று புதிதாக 2,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
மந்திரி சி.டி.ரவிக்கு கொரோனா
குறிப்பாக தலைநகர் பெங்களூரு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி விழிபிதுங்கி வருகிறது. மாநிலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது. மேலும், பாரபட்சமின்றி மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா ஆட்டுவித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று வரை எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல், ரங்கநாத், ராஜேகவுடா, அஜய்சிங், சரத் பச்சேகவுடா மற்றும் சுமலதா எம்.பி. ஆகியோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஆனேக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவண்ணா, உப்பள்ளி கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரசாந்த் அப்பய்யா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்க செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவருடைய செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று மழுப்பலாக கருத்து பதிவிட்டு உள்ளார்.
இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
36 ஆயிரத்தை தாண்டியது
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை தாண்டி பதிவாகி வருகிறது. மேலும் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
கர்நாடகத்தில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 600-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,798 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் 1,533 பேர்
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,798 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 716 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 880 பேர் அடங்குவர்.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,533 பேர், தட்சிண கன்னடாவில் 186 பேர், உடுப்பியில் 90 பேர், மைசூருவில் 83 பேர், துமகூருவில் 78 பேர், தார்வாரில் 77 பேர், யாதகிரியில் 74 பேர், தாவணகெரேயில் 72 பேர், கலபுரகி, பல்லாரியில் தலா 65 பேர், பீதரில் 63 பேர், விஜயாப்புராவில் 48 பேர், உத்தரகன்னடா, கதக்கில் தலா 40 பேர், பாகல்கோட்டையில் 37 பேர், ஹாசனில் 34 பேர், ராமநகரில் 30 பேர், சிவமொக்காவில் 26 பேர், மண்டியா, கொப்பலில் தலா 23 பேர், சிக்பள்ளாப்பூரில் 20 பேர், சாம்ராஜ்நகரில் 17 பேர், ஹாவேரியில் 16 பேர், ராய்ச்சூரில் 14 பேர், கோலார், குடகில் தலா 12 பேர், சித்ரதுர்காவில் 9 பேர், பெங்களூரு புறநகரில் 5 பேர், பெலகாவி, சிக்கமகளூருவில் தலா 3 பேர் உள்ளனர்.
கொரோனாவுக்கு 70 பேர் பலி
மாநிலத்தில் கொரோனாவுக்கு 70 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெங்களூருவில் 23 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், ஹாசனில் 2 பேர், மைசூருவில் 8 பேர், சிவமொக்காவில் 3 பேர், ராய்ச்சூரில் ஒருவர், பீதரில் ஒருவர், கலபுரகியில் 2 பேர், கொப்பலில் 2 பேர், கதக்கில் 3 பேர், தார்வாரில் 2 பேர், பெலகாவியில் ஒரு 2 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், உத்தரகன்னடாவில் ஒருவர், விஜயாப்புராவில் 2 பேர், துமகூருவில் 2 பேர், ஹாவேரியில் ஒருவர், பல்லாரியில் ஒருவர், சிக்பள்ளாப்பூரில் 2 பேர், தாவணகெரேயில் 3 பேர், ராமநகரில் ஒருவர் உள்ளனர்.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 796 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 20 ஆயிரத்து 587 மாதிரிகள் அடங்கும். 72 ஆயிரத்து 432 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்து 883 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.