சாக்லேட் தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’; ஊட்டி அருகே பரபரப்பு

ஊட்டி அருகே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி விற்பனை செய்யப்பட்ட சாக்லேட் வகைகளை தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-11 03:31 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சாக்லேட் வகைகள் ஊட்டி-கூடலூர் சாலையோரத்தில் செயல்படும் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் அந்த கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்த தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அந்த தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி எவ்வித அனுமதியும் பெறாமல் சாக்லேட் தயாரிப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக சாக்லேட் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாக்லேட் வகை பாக்கெட்டின் விலை ரூ.45-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தவறான விளம்பரம் செய்தது, அனுமதி பெறாமல் சாக்லேட் தயாரித்தது போன்ற காரணங்களுக்காக அந்த தொழிற்சாலை மற்றும் கடையை பூட்டி ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது:-

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த சாக்லேட் வகைகளின் மாதிரிகள் சோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு துறையிடம் பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதோடு சாக்லேட் வகைகளையும் தயாரித்து வந்துள்ளனர். அந்த தொழிற்சாலையின் தயாரிப்புகளை மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்