நலவாரியம் அமைக்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

நலவாரியம் அமைக்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-11 01:26 GMT
திருவாரூர்,

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 3 ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கவேண்டும்.

வேலையிழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வாழ்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக்குசேலன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு பள்ளியின் தாளாளரும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி சங்கத்தின் கவுரவ தலைவருமான சந்திரா முருகப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 186 நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடியில் தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் சங்கத்தினர் அந்தந்த பள்ளி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தரணி மெட்ரிக் பள்ளியில் நடந்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் இளையராஜா தலைமையில் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி எஸ்.பி.ஏ. பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமையில் 89-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மன்னார்குடி புனித ஜோசப் பள்ளியில் பள்ளி முதல்வர் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் 85 பேர் கலந்து கொண்டனர். இதேபோல பாரதிதாசன் மெட்ரிக்பள்ளி, அசோகாசிசுவிகார் மெட்ரிக்பள்ளி, தேவி மெட்ரிக்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் தாளாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்