செங்கம் அருகே கர்ப்பிணி மர்மச்சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

செங்கம் அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-10 23:36 GMT
செங்கம், 

செங்கம் அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணி

செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் என்ற மணிகண்டன் (வயது 32). இவரது மனைவி ஷோபனா (28). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஷோபனா மீண்டும் கருத்தரித்து 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஷோபனாவிற்கும், மணிகண்டனுக்கும் அவ்வப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் மணிகண்டனுக்கும் ஷோபனாவுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஷோபனா தூக்கில் தொங்கினார். இதனை கண்ட மணிகண்டனின் உறவினர் ராமகிருஷ்ணன் என்பவர் ஷோபனாவை மேல்பள்ளிப்பட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஷோபனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

இதைத்தொடர்ந்து மணிகண்டன், அவரது தாய் மற்றும் தந்தை உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஷோபனாவின் உறவினர்கள் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கூடி ஷோபனாவின் சாவில் மர்மம் உள்ளதாகவும் மணிகண்டனை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஷோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். மேலும் ஷோபனாவை சிகிச்சைக்காக அழைத்து வந்த ராமகிருஷ்ணனையும் ஷோபனாவின் உறவினர்கள் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சாலமன்ராஜா, மலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷோபனாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

2 பேர் கைது

மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன், அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்