அரசு சார்பில் உதவித்தொகை வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கோரோனா காலத்தில் தமிழக அரசு உதவித்தொகை வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Update: 2020-07-10 22:53 GMT
அனுப்பர்பாளையம்,

கொரோனா ஊரங்கால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.மேலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், கல்வி கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு நிபந்தனைகளையும், உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருசில பள்ளிகளில் கடந்த மாதம் வரை முழு சம்பளமும், சில பள்ளிகளில் பாதி அளவு சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை சங்க தலைவர் திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனி பழனிச்சாமி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். செயலாளர் கொழுமம் சின்னசாமி, பொருளாளர் கணியூர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா காலம் முழுவதும் மாதத்திற்கு தமிழக அரசு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தவும், நிலுவையில் உள்ள கல்வி கட்டணத்தை வசூல் செய்வதற்கும் அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். முறையான அங்கீகாரத்துடன் 10 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருப்பூரில் ஆஷர் நகர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 400 பள்ளிகளில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் என 15 ஆயிரம் பேர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்