ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தொடக்கம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-10 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு, நுண் கதிர் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது -மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், 700-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

கொரோனா வார்டு

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இதனை தவிர்க்கும் பொருட்டு தற்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 250 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடர் போடப்பட்டது.

மேலும் செய்திகள்