ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா கருங்கல்பாளையத்தை சேர்ந்த முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியானது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த முதியவர் இறந்தார்.

Update: 2020-07-10 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியானது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த முதியவர் இறந்தார்.

கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-க்கும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 312 ஆக மாறியது.

இந்தநிலையில் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 100 பேர் குணமடைந்து உள்ளனர்.

221 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதியவர் பலி

நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ரெயில்வேகாலனி, பி.பி.அக்ரஹாரம், வாய்க்கால்மேடு, வீரப்பம்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியார்நகர், சூரம்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் மொடக்குறிச்சி, சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், திங்களூர், பெருந்துறை சிப்காட் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர் காய்ச்சல் காரணமாக கடந்த 7-ந் தேதி இரவு 9 மணிஅளவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 8-ந் தேதி அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்