மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 93 மி.மீ. பதிவானது
கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 93 மி.மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 93 மி.மீட்டர் மழை பதிவானது.
இடி-மின்னல்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடலூரில் பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி- மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பின்னர் மழை தூறிக் கொண்டே இருந்தது. திடீரென பெய்த இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
பலத்த மழை
இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 93.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 3 மில்லி மீட்டரும் பதிவாகி இருந்தது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பண்ருட்டி 63, குப்பநத்தம் 59.20, விருத்தாசலம் 49, பெலாந்துறை 46.20, அண்ணாமலைநகர் 34, சேத்தியாத்தோப்பு 28.60, மே.மாத்தூர் 28, பரங்கிப்பேட்டை, சிதம்பரத்தில் தலா 19, லால்பேட்டை 17.80, கொத்தவாச்சேரி 17, புவனகிரி, குறிஞ்சிப்பாடி தலா 14, கடலூர் 11.20, கீழ்செருவாய் 10, வானமாதேவி, வேப்பூர், வடக்குத்து பகுதிகளில் தலா 9, காட்டுமயிலூர், தொழுதூர் பகுதியில் தலா 8, லக்கூர் 7.