அரசியல் தலைவர்களை சுற்றி கூட்டம் சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது

மராட்டியத்தில் மூத்த அரசியல் தலைவர்களை சுற்றி கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது.

Update: 2020-07-10 23:30 GMT
மும்பை, 

மராட்டியத்தில் மூத்த அரசியல் தலைவர்களை சுற்றி கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது.

சமூக இடைவெளி

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்கட்சி தலைவா் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் போன்ற மூத்த தலைவர்களின் நிகழ்வுகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் அது காற்றில் பறக்கிறது.

இதில் அதிகளவில் சமூக இடைவெளியை மீறியவராக எதிா்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு செய்து வருகிறார். அப்போது அவருடன் ஒரு கூட்டமே செல்வதை காண முடிகிறது. நாசிக் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது அவருடன் சுமார் 50 பேர் இருந்தனர்.

முயற்சி செய்கிறோம்

இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘‘எங்களின் எல்லா கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்றுகிறோம். நான் அதில் கவனமாக உள்ளேன். எனினும் ஒரு சில இடங்களில் எங்கள் தரப்பு கோரிக்கை விடுத்தும் மக்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இது மிக சில இடங்களில் மட்டுமே நடந்தது.

மக்கள் சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முயற்சி செய்கிறோம்’’ என்றார்.

மாதோஸ்ரீயில் கூட்டம்

இதேபோல சமீபத்தில் சிவசேனா கவுன்சிலர்கள் சிலர் பாராமதியில் அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தனர். இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் மீண்டும் கடந்த புதன்கிழமை மாதோஸ்ரீ வந்து சிவசேனாவில் இணைந்தனர். அப்போது சுமார் 25 பேர் முதல்-மந்திரியை சுற்றி இருந்தனர். முன்னதாக இவர்கள் அஜித்பவாரை பாராமதியில் சந்தித்த போதும் சமூகஇடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதேபோல வாஷிமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யஷோமதி தாக்கூர் நடத்திய நிகழ்ச்சியிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் பலர் முககவசம் கூட இல்லாமல் கலந்து கொண்டதை காணமுடிந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆர்வத்துடன் வரும் கட்சியினரை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. அவர்களுக்கு விளக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்