6 போலீசாருக்கு கொரோனா: குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
குலசேகரன்பட்டினம்,
6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
போலீசாருக்கு கொரோனா
உடன்குடியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி மூடப்பட்டது. தற்போது அந்த வங்கியில் பணிபுரியும் மேலும் 2 ஊழியர்களுக்கும், உறவினர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 6 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனிபிரிமின் தலைமையில் போலீஸ் நிலையம், போலீஸ் நிலைய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும் காவலர் குடியிருப்பில் உள்ள போலீசார், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரமன்குறிச்சியில் கர்ப்பிணி உள்பட 2 பேருக்கும், சியோன்நகர், ராமநாதபுரம், வாகைவிளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
எட்டயபுரம்
எட்டயபுரம் தாலுகாவில் உள்ள ஈராச்சி, சிந்தலக்கரை, முத்துலாபுரம், சோழபுரம், கடலையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண், எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த 49 வயது ஆட்டோ டிரைவர், எட்டயபுரத்தை சேர்ந்த 53 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றி வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார், கிராம உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாத்தான்குளம்
சாத்தான்குளத்தில் நர்சு உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.
ஆத்தூர்-ஆறுமுகநேரி
ஆத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி, அவரது மகன், தாயார் ஆகியோருக்கும், அதே தொழிற்சாலையில் பணியாற்றும் ஆத்தூர் பழைய கிராமத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சேர்ந்தபூமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர், தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர், தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆறுமுகநேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மனைவி, மகன், மகளுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஏற்கனவே ஆறுமுகநேரியில் வங்கி அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதேபோல் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலக பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் உள்பட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.