ராமநாதபுரம், சிவகங்கையில் மக்களை தொந்தரவு செய்தால் நிதி நிறுவன உரிமம் ரத்து; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்திற்கு முன்பாக பெற்ற கடனை வசூல் செய்வதில் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு நிதி நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

Update: 2020-07-10 05:13 GMT
ராமநாதபுரம்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து சூழ்நிலைக்கேற்ப தளர்வுகள் அறிவித்து வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் யாரையும் கட்டாயப்படுத்தி வீட்டு வாடகை வசூல் செய்வது, வங்கி மற்றும் பொது, தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி வசூல் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்வது சம்பந்தமாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மகளிர் குழுக்களுக்கு வழங்கிய கடன்களை செலுத்தக்கோரி தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது நடுத்தர, ஏழை-எளிய மக்கள் முழுமையாக வேலை இழந்து ஊரடங்கு காலத்திற்கு முன்பாக பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாத நிலை உள்ளதால் நிதி நிறுவனங்களின் நெருக்கடிக்கு ஆளாகி திகைத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- தற்போது சில தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலத்திற்கு முன்பாக பெற்ற கடனை வசூல் செய்ய வீடுகளுக்கு சென்று தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தொந்தரவு கொடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறி கடன் வசூல் என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் நிதி நிறுவனங்கள் மீது புகாரின் அடிப்படையில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்று பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அதுதொடர்பான புகார்களை 94899 19722 என்ற செல்போன் எண்ணில் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்