திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்கள்எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-09 22:50 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 6-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 4 ஆயிரத்தை நெருங்கும் வகையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று பாதிப்பு 4 ஆயிரத்தையும் கடந்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்திலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மும்மூர்த்திநகரை சேர்ந்த 53 வயது பெண், காங்கேயம் ரோடு அன்னை இல்லத்தை சேர்ந்த 80 வயது ஆண், திருப்பூர் டி.எஸ்.ஆர்.லே அவுட்டை சேர்ந்த 57 வயது ஆண், யுனிவர்செல் ரோட்டை சேர்ந்த 35 வயது ஆண், பல்லடம் அம்மன்நகரை சேர்ந்த 50 வயது பெண், வெள்ளகோவில் பாப்பவலசுவை சேர்ந்த 21 வயது பெண் ஆகிய 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மேல்சிகிச்சை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேரின் பாதிப்பு கணக்கு அவர்களது சொந்த மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு கணக்கு திருப்பூர் மாவட்டம் 259 ஆக இருந்து வந்தது. தற்போது மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 113 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 8 பேர் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 68 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த 85 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் பலியானார்.

அதே போல் உடுமலை பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஏற்கனவே மாவட்டத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 2 பேர் பலியானதால், கொரோனா தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்