கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போலீசார் 23 பேருடன் போலீஸ் கமிஷனர் சந்திப்பு அலட்சியமாக செயல்படக்கூடாது என அறிவுரை
பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 23 போலீசாரை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 23 போலீசாரை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சந்தித்து பேசினார். அப்போது அவர் அலட்சியமாக செயல்படக்கூடாது என்று போலீசாருக்கு அறிவுரையும் கூறினார்.
கலாசிபாளையம் போலீஸ் நிலையம்
பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. பெங்களூரு கலாசி பாளையத்தில் பணியாற்றும் 24 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர்களில் 23 போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். மற்றொரு போலீஸ்காரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிட்டி மார்க்கெட் பகுதியில் கலாசி பாளையம் போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக அந்த போலீஸ் நிலையம் சீல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் போலீஸ் நிலையம் செயல்படத் தொடங்கியது.
போலீசாருடன் சந்திப்பு
இந்த நிலையில், கலாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சென்றார். பின்னர் அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய போலீஸ்காரர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நீங்கள் தைரியமாக பணியாற்ற வேண்டும், உங்களுக்கு ஆதரவாக போலீஸ் துறை எப்போதும் இருக்கும் என்று போலீஸ்காரர்களிடம், பாஸ்கர்ராவ் கூறினார்.
அதே நேரத்தில் பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பணியாற்றுவதால் முன் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும், அலட்சியமாக இருந்து விடக்கூடாது, எப்போதும் முக கவசம் அணிய வேண்டும், கையுறை அணிந்து கொள்ள வேண்டும், குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் போது எச்சரிக்கையாக செயல்படுங்கள் என்று போலீஸ்காரர்களுக்கு, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.