கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை பழைய மருத்துவமனை முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
புதுக்கோட்டை,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை பழைய மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட தலைவர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமுத்து முன்னிலை வகித்தார். பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். மக்களுக்கான சேவையை எவ்வித தொய்வும் இல்லாமல் செய்து வரும் சூழலில் மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, நிர்வாகமே பணி வழங்காமல் இருந்தது போன்ற காரணங்களை மறைத்து தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ள தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத போக்கினை கைவிட வேண்டும். விடுப்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களை சென்னைக்கு அனுப்பும் பணியிட மாறுதலை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.