விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,527ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,527 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25,271 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1,400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3,935 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை சிவகாசி முன்னாள் நகர்மன்ற தலைவரும், குழந்தைகள் நல மருத்துவ நல நிபுணர் உள்பட 548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு மையங்களில் 393 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
127 பேர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சிவகங்கை மருத்துவ பரிசோதனை மையத்தில் 56 பேருக்கும், நெல்லை பரிசோதனை மையத்தில் 71 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். விருதுநகர் அன்னை சிவகாமிபுரம், வி.வி.எஸ்.காலனி, இளங்கோவன் தெரு, பாரைப்பட்டி தெரு, அல்லம்பட்டி, கருப்பசாமிகோவில் தெரு, பர்மாகாலனி, புல்லலக்கோட்டைரோடு முனிசிபல் காலனி, ஏ.பி.பி.காம்பவுண்ட், ம.கு.அய்யன்தெரு, பரங்கிரிநாதபுரம், கருப்பசாமி நகர், விவேகானந்தர் தெரு, புளுகனூர் கனிரோடு, முத்துராமன்பட்டி, பாண்டியன்நகர், ஆனிமுத்துபிள்ளையார் கோவில் தெரு, சிவந்திபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, கே.உசிலம்பட்டி, பெரியவள்ளிக்குளம், ஆத்துமேடு, சித்துராஜபுரம், அலங்காபேரி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உயர்வு
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,527 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக விருதுநகர், சிவகங்கை, நெல்லை மருத்துவ பரிசோதனை மையங்களில் சோதனை செய்ய ஏற்பாடு செய்தாலும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிய வேண்டிய நிலையில் உள்ளன. முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதாக புகார் கூறப்படும் நிலையில் விருதுநகர் பரிசோதனை மைய செயல்திறனை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு ஐ.சி.எம்.ஆர். அங்கீகரித்துள்ள ராபிட் ஆன்டிஜன் விரைவு மருத்துவ பரிசோதனை கருவிகளை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளின் தாமதமே நோய் பரவல் அதிகரிப்புக்கு அடிப்படை காரணம் என கூறப்படுவதால் இதில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.