கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பட்டாசு ஆலைகள், கடைகள் 19-ந் தேதி வரை செயல்படாது

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் வருகிற 19-ந் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-09 01:55 GMT
சிவகாசி

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தாலுகாவில் பட்டாசு ஆலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று நோய்பரவ தொடங்கியபோது அரசு அறிவித்தப்படி பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்திகளை நிறுத்திக்கொண்டன.

இதனால் போதிய வாழ்வாதாரம் இன்றி பட்டாசு தொழிலாளர்கள்தவித்து வந்தனர். ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அரசும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண தொகையாக வழங்கியது. அதன் பின்னர் தமிழக அரசும், மாவட்டநிர்வாகமும் அளித்த தளர்வு காரணமாக பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் உற்பத்தி நடைபெற்றது.

நோய் பரவல்

இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளது. நேற்றுவரை விருதுநகர் மாவட்டத்தில் 1497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 450-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திருத்தங்கல் டாக்டர் உள்பட 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் சிவகாசி தாலுகா பகுதியில் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தபகுதியில் வசிக்கும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சிலரும் பாதித்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து காலை 6 மணி முதல் மதியம் 3 மணிவரை மட்டுமே கடைகள் திறந்து விற்பனை செய்வது என முடிவு செய்து அதன்படி கடந்த 2 நாட்களாக மதியம் 3 மணியுடன் விற்பனையை முடித்து கொள்கிறார்கள்.

விடுமுறை

இந்தநிலையில் பட்டாசு ஆலைகளுக்கு வரும் தொழிலாளர்களின் நலன் கருதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிவகாசியில் உள்ள டான்பாமா, டிப்மா, மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசனை செய்து 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 11 நாட்கள் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளும், சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளும் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதிவரை செயல்படாது.

மேலும் செய்திகள்