நவிமும்பையில் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் நைஜீரியர் கைது

நவிமும்பையில் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2020-07-08 23:10 GMT
மும்பை, 

நவிமும்பையில் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளை கடத்தி வந்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள்

டெல்லியில் இருந்து நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி மங்கலா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த ரெயில் நவிமும்பை நில்ஜோ - தலோஜா ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்த போது உடனடியாக நிறுத்தப்பட்டது.

நைஜீரியர் கைது

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயிலில் ஏறி அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த சன்னி ஓச்சா ஐகே (வயது41) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அம்படமைன் என்பதும், அதன் மதிப்பு ரூ.2 கோடி என்பதும் தெரியவந்தது.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்