சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதே வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2020-07-08 23:00 GMT
சென்னை,

திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட குறைவாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதேபோன்று அனைத்து பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் இருக்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்றுடன் மற்ற நோய்களின் தாக்கமும் இருப்பவர்களை சிகிச்சை அளித்து காப்பாற்றுவதுதான் சவாலாக உள்ளது. இதுபோன்றவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை முன்கூட்டியே கண்டறிவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்க கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், ஆலோசனை வழங்குதல் என பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி திருவொற்றியூர் மண்டலத்தில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்பட்டு வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து, தொற்று எண்ணிக்கை குறையும் ஆறுதலான செய்தி தினம்தோறும் வரவேண்டும்.

மத்திய குழு தமிழகத்தில் மீண்டும் ஆய்வு செய்வது ஊக்கம் அளிக்கிறது. கடந்த முறை மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, கொரோனா நோய் தொற்று தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், திருவொற்றியூர் மண்டல கண்காணிப்பு அலுவலர் வர்க்கீஸ், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்

இதன்பின்பு, மணலி மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் அமர் குஷாவா, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டல அலுவலர் ராஜசேகர் ஆகியோருடன் ஆய்வு நடத்தினார்.

மேலும் செய்திகள்