தென்காசி மாவட்டத்தில் 131 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 131 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-07-08 22:30 GMT
தென்காசி,

வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் குமரேசன் இறந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 131 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ டிரைவர்

வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் குமரேசன் என்பவர் இட பிரச்சினை காரணமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தென்காசி தினசரி சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அயுப் கான், ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கருப்பையா தாணு மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென்காசியில் 11 இடங்கள் மற்றும் மேலகரம், காசிமேஜர்புரம், சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, கடையம், சுரண்டை உள்பட 131 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இடங்களில் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடப்பட்டது.

மேலும் செய்திகள்