கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குடோனில் இருந்து பருத்தி பஞ்சுகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குடோனில் இருந்து பருத்தி பஞ்சுகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்,
பூந்தோட்டம் வேளாண் விற்பனை குழுவின் இருப்பு குடோன் நன்னிலம் அருகே மூங்கில்குடியில் உள்ளது. இதில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இதனை இந்திய பருத்தி கழகம் மற்றும் தனியார் வியாபாரிகள் வந்து தரம் பார்த்து பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்கின்றனர். தற்போது பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மூங்கில்குடிக்கு திங்கட்கிழமை அதிகாலையில் மன்னார்குடி, கொல்லுமாங்குடி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை லாரி, டிராக்டர், சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வருகின்றனர்.
3 மடங்கு வாடகை அதிகரிப்பு
ஆனால் இந்த குடோனில் பருத்தி பஞ்சுகளை வைப்பதற்கு இடம் இல்லை. இதனால் பருத்தி பஞ்சு மூட்டைகளை இறக்க முடியாது, காத்திருங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. விவசாயிகள் பருத்தி பஞ்சுகளை ஏற்றி வரும் வாகனங்கள் வாடகை வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்கள் 2 நாட்கள் வரை காத்து கிடப்பதால் அதற்கான வாடகை 3 மடங்கு அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. 2 நாட்களை வரை காத்து கிடப்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர்.
உடனடியாக வெளியேற்ற வேண்டும்
எனவே பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குடோனில் இருந்து அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 7 நாட்கள் வரை வெளியேற்றாமல் இருப்பதால் தற்போது கொள்முதலுக்காக கொண்டு செல்லும் பருத்தி விவசாயிகள் பாதிப்படைகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பருத்தி பஞ்சுகளின் விலையும் மிகவும் குறைவாக உள்ளது. பருத்தி பஞ்சுகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் விவசாயிகள் முதல் நாளே அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஏற்றி வருகின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகளின் பருத்தி பஞ்சுகளை குடோனில் வைப்பதற்கு இடம் இருப்பதில்லை. எனவே உள்ளூர் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பருத்தி பஞ்சுகளை உடனே குடோனில் வைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.