கொரோனா பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை: முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-07-08 01:30 GMT
புதுச்சேரி, 

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை ஊக்குவிக்கும் நிலையில் நாம் உள்ளோம்.

தமிழகத்தில் சித்தா முறையில் வைத்தியம் பார்ப்பது தற்போது நல்ல முன்னேற்றத்தை தந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. புதுவையிலும் நகர மற்றும் கிராம பகுதிகளில் ஆர்சானிக் ஆல்பம் என்ற மாத்திரையை தருகிறோம். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. மக்கள் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா முறையில் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். சித்த மருத்துவர்களை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களது அறிவுரைப்படி செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து பேசி உள்ளோம். கொரோனா பரிசோதனை நடத்த தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசும் அனுமதி அளித்து உள்ளது.

ஜிப்மரில் ஆயிரம் பேருக்கும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 பேருக்கும் நாள்தோறும் உமிழ்நீர் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. அதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஒரு வாரத்தில் பரிசோதனை மையங் களை அமைத்து சிகிச்சை அளிக்க தயாராக இருக்க தனியார் மருத்துவமனைகளை அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்