கூடலூர் அருகே வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்
கூடலூர் அருகே வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் கூடலூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மான், யானை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்கு சென்று உறக்க சத்தம் போட்டும், தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும் வன விலங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு கடமான்குளம் பகுதியில் உள்ள சதீஷ் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து 500-க்கும் மேற்பட்ட வாழைமரங்களையும், 50-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்திவிட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.