சிவகாசி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 550 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
சிவகாசி தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 550 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் 750 படுக்கைகள் உள்ளன. தற்போது உள்ள நிலையில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
சிகிச்சை மையம்
எனவே அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை முறையான கண்காணித்து சிகிச்சை அளிக்க சிவகாசி தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 550 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள படுக்கைகளும் விரைவில் தயாராகி விடும்.
தற்போது உள்ள நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனை மையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வழங்கி உள்ள பரிசோதனை கருவி மூலம் சோதனை மாதிரிகளை சேகரிக்கவும், அரசு வழங்கி உள்ள கருவி மூலம் சோதனை முடிவுகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவில் பரிசோதனை
விரைவில் அரசு மேலும் ஒரு ஆர்.டி.பி.சி.ஆர். கருவியை வழங்க உள்ளது. இந்த கருவி வந்தவுடன் விருதுநகர் மையத்தில் அதிக அளவில் பரிசோதனை செய்ய வாய்ப்பு ஏற்படும்.
தற்போது சிவகங்கை, நெல்லை, தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள மையங்களுக்கு பரிசோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ளது. எனினும் இன்னும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் தெரியவேண்டி உள்ளது. பரிசோதனைகளை விரைவுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.