மதுரையில் கொரோனா நோயாளிகள் 465 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

மதுரையில் கொரோனா நோயாளிகள் 465 பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2020-07-07 01:41 GMT
மதுரை, 

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை தாங்கினார். கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா வைரஸ் தொற்றிற்கு அதிக அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் 95 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தெருவாரியாக கணக்கெடுப்பு

தற்போது தெருவாரியாக பாதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு 5 பேருக்கு மேல் பாதிப்பு கண்ட தெருக்கள், 4 நபர்கள் பாதிப்பு கண்ட தெருக்கள் என கணக்கெடுக்கப்பட்டு தடைசெய்யப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் 8,443 தெருக்களில் கொரோனா கண்டறியப்பட்டு 47 தடைசெய்யப்பட்ட தெருக்களிலும், 2,109 வீடுகளில் தடுப்புகளும், 21,148 வீட்டு வீதிகளும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 3 பேருக்கு குறைவாக பாதிப்பு கண்ட 1,675 தெருக்களிலும், 3 முதல் 4 வரை உள்ள 15 தெருக்களிலும், 5-க்கும் மேற்பட்ட 32 தெருக்களிலும் கணக்கெடுக்கப்பட்டு முதற் கட்டமாக 3 முதல் 5 வரையுள்ள 47 தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நபர்களுக்கு கீழுள்ள 1,675 தெருக்களில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என 1,477 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கோவிட் ஹெல்த் சென்டரில் 859 படுக்கைகளும், அறிகுறி கண்டு பாதிப்பு இல்லாதவர்களை கோவிட் கேர் சென்டரிலும், வீடுகளில் தனி அறை மற்றும் அனைத்து வசதிகளும் இருந்த சுமார் 465 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவுகள்

உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் மதுரைக்கு கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டால் அதனை மறைக்காமல் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மருத்துவமனை சென்று விட்டால் எளிதாக குணப்படுத்தி விடலாம். 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மூலம் அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், யாகப்பா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் காய்ச்சல் குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம் மூலம் நடக்கும் கொரோனா பரிசோதனைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி சேவை மையத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவதை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்