தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சாவூர்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிய காலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாளடைவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இதர மாவட்டங்களில் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இந்த முழு ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமே காணப்படவில்லை. வாகனங்களும் இயக்கப்படாததால் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
மக்கள் நடமாட்டம் இல்லை
ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்றைய முழு ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மட்டும் இயங்கின.
வெறிச்சோடின
வழக்கமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் கூட நேற்று முழு ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. பெட்ரோல் பங்க்குகளும் நேற்று மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மருந்துக்கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
பட்டுக்கோட்டை, கும்பகோணம்
பட்டுக்கோட்டை பகுதிகளில் மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் கும்பகோணம் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கும்பகோணம் மேம்பாலம், பழைய பாலக்கரை, தாராசுரம், தாலுகா போலீஸ் நிலையம், பொற்றாமரைகுளம், மடத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தேவையின்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் கும்பகோணம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை சாவடி பஜார், பஸ் நிறுத்தம், மதகடிபஜார், பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, வழுத்தூர், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கும்பகோணம் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கையொட்டி அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பாபநாசம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பேராவூரணியில் முழு ஊரடங்கையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், கிராம நிர்வாக அதிகாரிகள் சக்திவேல், விஜய் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முழு ஊரடங்கை மீறி திறந்திருந்த டீக்கடை, பெட்டிக்கடை உள்பட 7 கடைகளுக்கு பூட்டு போட்டனர்.